
கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.
தென்திருப்பேரை,
கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.
கடம்பா குளம்
ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் முதன்மையானது கடம்பா குளம் ஆகும். ‘கடலில் பாதி கடம்பா‘ என்று அழைக்கப்படும் இந்த குளம் நிரம்பினால்தான், திருச்செந்தூர் வரையிலான அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும். தென்திருப்பேரை அருகே உள்ள இந்த குளம் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது தண்ணீரின்றி குளம் முழுவதும் மணல் மேடாகவும், புதர் செடிகளாகவும் காட்சி அளிக்கிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கடம்பா குளத்தை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது விவசாய நிலங்களுக்கு தேவையான கரம்பை மண்ணை அள்ளிச் சென்றனர். அப்போது சிலர் ஆற்று மணலை மட்டுமே தொடர்ந்து அள்ளியதால், தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் தூர்வாரும் பணி
இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில், கடம்பா குளம் தூர்வாரும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். தென்திருப்பேரையை அடுத்த கடையனோடை மதகில் இருந்து கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் கரம்பை மண்ணை அள்ளி, லாரியில் ஏற்றி விவசாய நிலங்களில் கொண்டு சென்று கொட்டினர். தொடர்ந்து 10 நாட்கள் தூர்வாரும் பணி நடக்கிறது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், தாசில்தார் அழகர், ஸ்பிக் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன், நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக