.தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு: ஜூன் 12, 2017 11:32

தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் உருவப்படம் திறப்பு விழா தூத்துக்குடியில் இன்று நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு என்.பெரியசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள மாடன்குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 89 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் முடிந்தவரை குளங்கள், குட்டைகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க. உறுப்பினர் இல்லாத தொகுதியிலும் கூட தி.மு.க.வினர் சிறப்பாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது பினாமி ஆட்சி நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் ஏதுவும் செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை போக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர் மாடன் குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக