
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தால் சுமார் 13 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தால் சுமார் 13 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது என்று தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் தெரிவித்தார்.
இடைக்கால தடை
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தில்(20 எம்.ஜி.டி) தினமும் 9 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடந்த 2011–ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட 46 ஆயிரத்து 107 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இதனால் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
ஆய்வு
இந்த நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மாநில இளைஞர்அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு வந்தார். அங்கு 20 எம்.ஜி.டி. திட்டத்துக்கான கிணறு, நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்த பிறகு முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், ஆற்றில் தண்ணீர் வரத்தின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டு அறிந்தார்.
இழப்பு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 20 எம்.ஜி.டி திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தாமிரபரணி பாசனத்தில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.250 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பல விவசாயிகள் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். விவசாயிகள், பொதுமக்களை தண்ணீர் பற்றாக்குறை நிலையில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் எங்கள் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் தாமிரபரணி பாசனத்தில் முப்போக நெல்விளைச்சல் தடையின்றி முழுமையாக நடைபெறவும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், தற்போதைய இடைக்கால தடை உத்தரவை நிரந்தரமாக்கி தருவோம். இனிமேல் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு எந்த வகையிலும் தண்ணீர் எடுக்காமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு மாநில இளைஞர்அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் கூறினார்.
ஆய்வின் போது, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு, விவசாய சங்க தலைவர் குமார், மாவட்ட முன்னாள் செயலாளர் காசிராஜன், இளைஞர் அணி நிர்வாகிகள் தனபால்ராஜ், பரதன், சேக்முகமது, இசக்கிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக