
தூத்துக்குடியில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்தை டீன் சாந்தகுமார் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்தை டீன் சாந்தகுமார் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
விண்ணப்பம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன.
அதன்படி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு 350 விண்ணப்பங்கள் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று காலை தொடங்கியது. விண்ணப்பம் வினியோகத்தை தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் சாந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கட்டணம்
இந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்க விரும்புகிறவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு தனியாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எந்தவித கட்டணமின்றியும், மற்றவர்கள் ரூ.500–க்கான வங்கி வரைவோலை செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 213 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்க 60 பேர் விண்ணப்பம் பெற்று சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக