
ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய தாலுகா அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரின் மையப்பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அருகில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் அருகில் பஸ் நிலையம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், நூலகம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
எனவே ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம், நீதிபதி குடியிருப்புக்கு அருகில் தாலுகா அலுவலகத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 38 சென்ட் நிலத்தில் ரூ.2 கோடியே 39 லட்சம் செலவில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்கு ஏரல், பெருங்குளம், சாயர்புரம், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், அப்பகுதி மக்கள் 2 பஸ்களில் மாறி வர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தற்போது இயங்கும் தாலுகா அலுவலக வளாகத்திலேயே அதன் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் அதிகளவு இடவசதி உள்ளது.
எனவே அங்கேயே புதிய தாலுகா அலுவலகத்தை கட்ட வேண்டும். தாலுகா அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.
முழு கடையடைப்பு
அதன்படி ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. டீக்கடை, மெடிக்கல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நகர் முழுவதும் வெறிச்சோடியது.
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன், நகர செயலாளர் பெருமாள், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு, செயலாளர் தங்கவேல்மணி, ம.தி.மு.க. நகர செயலாளர் வள்ளிமுத்து, பா.ஜ.க. மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் ரமேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், ராஜவேல், ஜெயபாலன், சந்துரு, காசிராமன், சீனிவாசன், வீரசங்கர்,
விவசாய சங்க பிரதிநிதி வேலையா, ஜமாத் செயலாளர்கள் ஷாஜகான், அப்துல் சலீம், சைவ வேளாளர் சங்க செயலாளர் காளியப்பன், தி.மு.க. கிளை செயலாளர் அருண்குமார், தொழிலாளர் அணி சங்கரபாண்டியன், இலக்கிய அணி அண்ணாமலை, வர்த்தக அணி ராகவன், விவசாய அணி பட்டாணி மற்றும் 43 பெண்கள் உள்பட 113 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக