
தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட சிலருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தீவன அபிவிருத்தி
கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் குறைவில்லாமல் கிடைப்பதற்கு ஏதுவாகவும், கால்நடை வளர்ப்போரின் பசுந்தீவன உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழக அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவன அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
மானியத்துடன்...
அதன்படி மாவட்டத்தில் அதிக பசுந்தீவன மகசூல் தரக்கூடிய கம்பு நேப்பியர் பசுந்தீவன ஒட்டுப்புல் 200 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. 0.25 ஏக்கருக்கு 4 ஆயிரம் புல் கரணைகள் பயிரிடுவதற்கு மானியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பயனாளி இறவை பாசனம் உள்ள கால்நடை வளர்ப்பவராக இருக்க வேண்டும். தீவனச் சோளம் பயிரிட விதைகள் மானியமாக வழங்கப்படும். மானாவரியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தீவனச்சோளம் மற்றும் தீவனத்தட்டைப்பயிறு பசுந்தீவன சாகுபடி செய்திட விதைகள் மானியமாக வழங்கப்படும்.
தீவன விதை உற்பத்தி செய்ய கால்நடை வளர்ப்போரின் நிலத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் தீவனச்சோளம் மற்றும் 5 ஏக்கர் பரப்பளவில் தீவனத்தட்டைப்பயறு விதைகள் முன்னோடி விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுதல். உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் முறையே ஒரு கிலோ தீவனச்சோளம் ரூ.50–க்கும், ஒரு கிலோ காராமணி ரூ.75 என்ற அடிப்படையில் துறையின் மூலம் கொள்முதல் செய்யப்படும். கால்நடைகளுக்கான 300 அடர் தீவன அசோலா திடல் அமைப்பதற்கு (100 சதவீதம் மானியத்தில்) இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஹைட்ரோபோனிக் என்னும் புதிய தொழில்நுட்ப முறையில் பசுந்தீவனம் வளர்ப்பதற்கு மானியம் வழங்கப்படும்.
முன்னுரிமை
இந்த திட்டங்களில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், விலையில்லா கறவை மாடு பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், புதுவாழ்வு திட்டம் மூலம் பயன்பெற்ற கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம், என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக